சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் உணவு வழங்கி உதவி செய்துள்ளார்.
“மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதிகன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்க பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ,திரை துறையை சேர்ந்தவர்கள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களின் தொகுப்பை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு, ட்விட் செய்துள்ளார்.
அதில் “த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை… இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம்.அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன்.எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும்.
படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம்,அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்.. வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.