மதுபோதைக்கான வாசல்களை அகலத் திறந்துவைக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின், பெண்களின் பல்லாண்டு கோரிக்கையான பூரண மதுவிலக்கை எப்படியாவது ஆளும் அரசுகள் கொண்டுவந்து நிம்மதியை தந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கும் வேளையில், அதற்கான சாத்தியங்களை எல்லாம் மூடிவிட்டு மதுப்போதையை தொடர்ந்து அதிகரிக்கும் நடவடிக்கைகளையே ஆளும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மக்களின் நலனை அடகுவைத்து வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஆளும் திமுக அரசும் மதுபோதைக்கான வாசல்களை புதிய அனுமதிகள் மூலம் அகலத் திறந்து வைத்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் மஹால்கள், விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி மதுவிருந்து நடத்தலாம் எனத் தமிழக அரசின் அரசிதழில் அரசாணை வெளியாகி இருக்கிறது.
டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி மண்டபங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த அனுமதிக்கும் அரசின் முடிவு தமிழக இளைஞர்களை நிரந்தரமாகவே மதுப்போதைக்குள் தள்ளிவிடும்.
ஒருபுறம் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், மது பார்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துவிட்டு, மறுபுறம் பொது இடங்களிலும் மதுவிருந்துக்கு அனுமதிக்கும் அரசின் முடிவானது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மக்கள் நலனுக்கு எதிரான பொறுப்பற்ற இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
போதையின் பிடியிலிருந்து தமிழக இளைஞர்களை காக்க ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற உறுதிமொழி திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சியில், திருமண மண்டபம் வரை மதுபோதையை அனுமதித்திருப்பது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
போதைப் பொருட்கள் புழக்கத்தில் மிக முக்கிய பங்கை டாஸ்மாக் மது விற்பனை வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஒரு பொறுப்புள்ள அரசாக மது விற்பனையையும் தடை செய்து, ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை உறுதி செய்வதுதான் ஒரு பொறுப்புள்ள மக்கள் நலன் அரசாக இருக்க முடியுமே தவிர, வருமானத்துக்காக இதுபோன்ற திருமண மஹால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மது விருந்துக்கு அனுமதி அளிப்பது மக்கள் நலன் அரசாக இருக்க முடியாது.
பார்கள், நட்சத்திர ஒட்டல்கள் தவிர்த்து பிற இடங்களில் மது பரிமாறுவது சட்டவிரோதமாக இருந்து வந்த நிலையில், இனி அந்த சட்ட விரோத செயலை கட்டணம் செலுத்தி அனுமதிபெற்று நடத்திக்கொள்ளலாம் என்பது மிகவும் ஆபத்தான நிலைக்கு தமிழகத்தை கொண்டுசென்று விடும்.
கல்வியிலும், மனித வளக் குறியீட்டிலும் முதன்மை நிலையில் உள்ள தமிழ்நாடு, மிகச் சமீப காலங்களாகவே போதையால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினங்களில், உருவாகின்ற சிறார் குற்றவாளிகளின் பின்னணியில் மது போதையும், போதை வஸ்து பழக்கங்களுமே முதன்மையான காரணியாக உள்ளன.
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தான் சாலை விபத்துகளில் முதலிடம் வகிக்கின்றது. இதற்கு காரணம் மதுபோதை.விபத்துகள் மட்டுமின்றி பல்வேறு குற்றச் செயல்களுக்கும் அதுவே காரணம். குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என குற்றச்செயல்களின் மூல காரணமாகவே மதுபோதை உள்ளது.
மது உள்ளிட்ட போதையானது, சுகிப்பவர்களை மட்டும் கொல்வதில்லை, சுற்றி இருப்போரையும் சேர்த்தே கொன்று விடுகிறது. எனவே, இதனை ஒரு தனி மனித தவறாகவோ அல்லது தனி நபர் இழப்பாகவோ பார்க்காமல், ஒட்டு மொத்த சமூகத்தின் இழப்பாக நாம் பார்க்க வேண்டும்.
ஆகவே, தமிழக அரசு திருமண மஹால்கள், அரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் மது விருந்து நடத்த அனுமதிக்கும் மோசமான அரசாணையை திரும்பப்பெற வேண்டும். அனைத்து விதமான போதைகளிலிருந்தும் தமிழகத்தை விடுவித்து உண்மையான போதைப் பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை நோக்கி நகரும் நடவடிக்கையையும் சமூக நீதி அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.