ராசிபுரம் அரசு கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட தலைவர் தங்கராஜ் மாணவனை தர தரவென போலீசார் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இரு பிரிவுகளின் கீழ் வகுப்பு செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக சுந்தரமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவியிடம் பேராசிரியர் சுந்தரமூர்த்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பேராசிரியர் சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர். தலைமறைவாக உள்ள பேராசிரியர் சுந்தரமூர்த்தியை கைது செய்யக்கோரி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தேர்வை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் தங்கராஜ் கல்லூரி வளாகத்தில் இருந்து சாலைக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று உள்ளார். சாலைக்கு செல்ல முயன்ற மாணவனை காவல்துறையினர் அடித்து தர தரவென குண்டு கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கல்லூரி மாணவனை அடித்து இழுத்துச் சென்ற காவல் துறையை கண்டித்து மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற மாணவனை மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வர வேண்டும் என மாணவ மாணவிகள் 1 மணி நேரத்திற்கு மேலாக கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவ மாணவிகளின் தொடர் போராட்டத்தால் போலீசார் கைது செய்யப்பட்ட மாணவனை இருசக்கர வாகனத்தின் மூலம் காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் கல்லூரி வளாகத்தில் விடுவித்தனர். மாணவனின் வரியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாணவ மாணவியரிடம் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உறுதி அளித்தார்.