நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் (Modi visit to Kanyakumari)நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்.
2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பிகார், உத்தரபிரதேசம்,டெல்லி ,கர்நாடகா , என நாடு முழுவதும் பிரதமர் மோடி,சுற்றுப்பயணம் மேற்கொண்டும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டும் வருகிறார்.
அந்த வகையில், இன்று 5 வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: ”பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை..” – அடடே.. செல்வப்பெருந்தகையின் மாஸ்டர் பிளான்!
இதற்காக, இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் பிரதமரை பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் ,உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பின்னர், சாலை மார்க்கமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக-வில் கட்சியை இணைத்த சரத்குமார், விஜயதரணி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
நண்பகல் 12.15 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.
இந்த சூழலில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.