நரிக்குறவ இன மக்கள் சாதிச் சான்றிதழ் பெற இயலாத அவலநிலைக்குத் தமிழ்நாடு அரசே காரணம் என்று வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர். குருவிக்காரர் தமிழ் நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்ததது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின் கருத்துருவான “நரிக்குறவன். குருவிக்காரன்” சமூகங்களை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37 வது இனமாக சேர்த்துஒன்றிய அரசு அரசிதழ் வெளியிட்டது.
அதற்கேற்ப தமிழக அரசும் மேற்காணும் சமூகத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியடைய ஏதுவாக அரசாணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சா.மெ.1)துறை, நாள் 17.03.2023 வெளியிட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் அவர்கள் பிரதமர் அவர்களை “நரிக்குறவன், குருவிக்காரன்” 61001 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை “நரிக்குறவர். குருவிக்காரர்” என திருத்தம் வெளியிட கோரியுள்ளார். இதற்கான பணிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதற்கிடையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், வரும் கல்வியாண்டிலேயே இப்பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக, காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ஒன்றிய அரசு வெளியிட்டவாறே, தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே மலையப்பநகரில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவரது மகள், கோகிலா மேல்படிப்பிற்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் தவிப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அரசு இணையத்தளத்தில் நரிக்குறவ இன மக்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருப்பதாக சசிகலா தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இன பட்டியலில் நரிக்குறவர் இனத்தை மத்திய அரசு சேர்த்தும், தமிழ்நாடு அரசு இணையதளத்தில், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மாணவி கோகிலாவின் கல்வியைத் தொடர வழிவகை செய்யும் வகையில் சாதி சான்றிதழ் கிடைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.