கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று (26.11.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திதிகுறிப்பில்..
நாளை (27.11.23) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இந்நிலையில், இன்று (26.11.23) கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை திங்கள்கிழமை (27.11.2023) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து செவ்வாய் கிழமை முதல் சனிக்கிழமை வரை (28.11.2023 – 02.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.