Zafar Sadiq drug case திமுகவின் சென்னை மேற்கு மண்டல அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாஃபர் சாதிக். 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தலைமறைவாக இருந்த இவரை கடந்த வாரம் 9 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர் என்.சி.பி. காவல்துறையினர். தற்போது, அது குறித்த விசாரணையை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு காவல் துறையினரும், அமலாக்கத் துறையினரும் விசாரித்து வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு இதில் தொடர்பிருப்பதாக கூறியும் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விருப்பதாகவும் கூறி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மாநிலம் முழுக்க போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றன.
திமுகவுக்கு சிக்கல்:
இப்பிரச்சனையானது பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், இது அக்கட்சியின் வாக்கு வங்கியைக் கூட பதம் பார்க்கலாம் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக அவதூரு வழக்கை தொடுத்துள்ளார் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின்.
இதையும் படிங்க: ”பா.ஜகவும், அதிமுகவும் ப்ராடு கம்பெனி”பொளந்து கட்டும் டி.கே.எஸ். இளங்கோவன்!
முதல்வரின் நற்பெயருக்கு களங்கம்:
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் இன்று (14.03.2024) தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “கடந்த மாதம் 8 ஆம் தேதி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதை தடுக்க அரசும், முதல்வரும் தவறி விட்டனர் என்று தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்று கடந்த 8ம்தேதி பேட்டியளித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்து தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. போதை பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது. கஞ்சா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதை பொருள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது கிரிமினல் குற்றம்:
தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடம் முதல்வருக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையிலும் எடப்பாடி பழனிச்சாமி அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ்(அவதூறு பரப்புதல், அவதூறு வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்கு உரிய கிரிமினல் குற்றமாகும். எனவே முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கருத்துகளை வெயிட்ட எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் ஜி.தேவராஜன்.
இதையும் படிங்க: ”பா.ஜகவும், அதிமுகவும் ப்ராடு கம்பெனி”பொளந்து கட்டும் டி.கே.எஸ். இளங்கோவன்!
அண்ணாமலை மீதும் வழக்கு:
இதேபோன்று, “கடந்த மாதம் 29ம்தேதி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ ‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதை பொருள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்துமே பொது வெளியில் சர்வசாதாரணமாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 33 மாத காலத்தில் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது’ என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் மக்களிடையே உள்ள நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது.
தமிழக முதல்வர் தமிழகத்தை கஞ்சா பயிரிடப்படாத மாநிலமாக மாற்றி வருகிறார். ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் கஞ்சா வருவதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடுமையான நடவடிக்கையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் கடத்தலை (Zafar Sadiq drug case) தடுப்பது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே பொய்யான கருத்துகளை அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் அவதூறு வழக்கை தாக்கல் தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் ஜி.தேவராஜன்.
அவரது இந்த மனுக்கள் மீதன விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.