இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பாசிடிவ் நபர்களின் தொடர்பில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள்,உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மேலும் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2% பேர் ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர்.
வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து ரயில் நிலையங்களில் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி பரிசோதனை நடத்தப்படும்.
மேற்குறிப்பிட்டவர்களை தவிர மற்றவர்களுக்கு தேவையில்லாமல் பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு சுமார் 1,00,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் தொற்று குறைந்து வருவதால் இதை 60,000 குறைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.