2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உள்ளது என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7 நாட்கள் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில் “எனது தாய்மொழி மலையாளம், ஆனால் நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்,
தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம், இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம், தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது உள்ள வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகலாம், படைப்பாற்றல் இருந்தால் மாணவர்கள் ஆளுமைகளாக உருவாகலாம், எதிர்காலத்தில் உலகத்தைத் தமிழன் ஆளுக் கூடிய வாய்ப்புகள் உள்ளது” எனப் பேசினார்,
இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் “தமிழுக்கும் மதுரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, இலக்கியத்திலிருந்து தான் நம்முடைய எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள முடியும், தமிழ் மொழியின் தொன்மை 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ளது.
மேலும் 2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உள்ளது, சங்க இலக்கியத்தில் பயன்படுத்திய சொற்கள் தற்போது கூட வழக்காடு சொற்களாகப் பயன்படுத்தி வருகிறோம், பாண்டிய நாட்டில் பேசப்படும் மொழி தேவாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எனத் தமிழ் மொழி வழி காட்டுகிறது, தமிழ் மொழி நம்மை இணைத்து வைத்துள்ளது,
தமிழ்நாட்டிலிருந்து நிலங்கள் பிரிந்து வேறு மாநிலங்களாக உருவாகி இருந்தாலும் மனங்கள் மாறவில்லை, தமிழ்நாட்டின் தொன்மையை உறுதிப்படுத்தும் வண்ணம் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது, மதுரையில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகம் அறிவுசார் நூலகமாக அமையும்” எனப் பேசினார்.