ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கடல் போல் தேங்கிய மழை நீரில் குளித்து கும்மாளம் அடித்த போதை ஆசாமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை நேரத்தில் மேகம் கருமூட்டமாக காணப்பட்டது.
பின்னர் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், காக்காவேரி, பட்டணம்,ஆண்டகளூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கனமழை பெய்த நிலையில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீரானது கடல் போல் காட்சி அளித்தது. பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரானது முழங்கால் வரை தேங்கியதால் பேருந்து செல்லும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மதிப்பிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரில் குளித்து கும்மாளம் அடித்தார்.
மேலும் தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கி உள் நீச்சல் முதல் அனைத்து விதமான நீச்சல்களும் செய்து அங்குள்ள பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து போதையில் செய்யும் காரியங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி இருந்த மது பிரியரை மீட்டு அனுப்பி வைத்தார்.
தலைக்கு ஏறிய மது போதையால் தான் என்ன செய்வதை என தெரியாமல் செய்த செயலால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடையே சிரிப்பலையை மூட்டியது.