பட்டியல் சாதி (எஸ்.சி) மாணவர்களின் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்துதாஸ் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகள் உட்பட்ட 13,000 பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம் பள்ளிகளில் 50 %-க்கு மேலுள்ளனர். ஆயினும் வேறு 10,000 பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18%-க்குக் கீழாகவே உள்ளது.
1,000 பள்ளிகளில் இது 5%-க்குக் குறைவாகவும், 100 பள்ளிகளில் 0% ஆகவும் உள்ளது. இதுபற்றிய புள்ளிவிவரங்களை 2005 முதல் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும் இது பற்றிய ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் இல்லை.
தற்போதாவது எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்துக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து, மாணவர்களின் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த, கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் இதுகுறித்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18% க்குக் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து அவர்களின் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.