சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தில் தேனி போலீசார் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி அதிகாலை தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரில் அவரை கைது செய்ததாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.
கோவை சைபர் க்ரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.முன்னதாக கைதின் போது, சங்கர் மற்றும் அவருடன் இருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் இந்த வழக்கினை பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக, ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் கோவை சிறையில் இருந்த சங்கரை கஞ்சா வழக்கில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி பெறப்பட்டது.
இதையும் படிங்க: கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்
அதன்பேரில் புதன்கிழமை (மே8) மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் காவலுடன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்படுத்தபட்ட பின் போலீஸார் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தில் தேனி போலீசார் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுக்கு சங்கர் அறையின் சாவி இல்லாத காரணத்தால் போலீசார் சவுக்கு சங்கர் அலுவலக கதவை உடைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் ஏதேனும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா விற்பனை மேற்கொண்ட நபர்களிடம் எவ்வாறு சவுக்கு சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது.எத்தனை ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் அவர் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகள் அலுவலகத்தில் ஏதாவது கஞ்சாக்கள் வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் அதிரடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.