தமிழகத்தில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைத்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசியக் கடைகள் தவிர, டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
இதன் பின்னர், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததாலும், தமிழக அரசின் வருமானத்தை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது.
மேலும், மதுபானங்கள் வாங்க வருவோர் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மாற்றப்பட்டிருந்த நேரத்தை மாற்றி டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்றும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.