ஒமிக்ரான் வைரஸ் என அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது உச்சத்தில் இருந்தத கொரோனா வைரஸ் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால், சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சியின் துரிதமாக மேற்கொண்டதை அடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்நிலையில் வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “வரலாறு காணாத மழை பெய்த போதிலும் பாதிப்பு என்பது குறைவாகவே ஏற்பட்டுள்ளது . இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும் மழைநீர் தேங்கும் இடங்களில் அப்பகுதி மக்களின் வழிகாட்டுதல்களோடு இணைந்து அதரிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும், சென்னையில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான வடிகால்கள் இல்லாததே மழை நீர் தேங்கியதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இரவு, பகல் பாராமல் உழைத்து கொரோனவை கட்டுப்படுத்திய நிலையில், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இயற்கையை நம்மால் தடுக்க முடியாது ஆனால் திறமையாக கையாள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போது ஒமிக்ரான் அச்சம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என்றும் தெரிவித்தார்.