தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மாநில தழுவிய முழு அடைப்பிற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்ததாக, அவர் மீது குற்றம்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடு சிஐடி குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்களும் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்களும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நேற்று தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் தமிழக மற்றும் ஆந்திர பேருந்துகளும், அதேபோல ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது.
விஜயவாடா நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான விசாரணையில், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சந்திராபாபு நாயுடுவை செப்டம்பர் 22 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கக்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி மாநில தழுவிய முழு அடைப்பிற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனசேன, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
குப்பம் தொகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. சந்திராபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.