தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காலவரையற்ற போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வரும் நிலையில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் உறுதியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு போராட்டத்தை கைவிட கெடு அளிக்கப்பட்ட நிலையில், தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சார்பில் முறையான அறிவிப்பு வரும்வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
“பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும்.
மேலும், சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.