நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை, 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்திருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது.
இந்த சந்திரயான்-3, விண்கலம் கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இந்த ரோவர் 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் லேண்டரை 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் ரோவரை இறக்கி ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. ஆனால் சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. ஆனால் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் விக்ரம் லேண்டரை, சந்திரயான் -3 திட்டத்தின் மூலம் இஸ்ரோ அனுப்பியது. இது கடந்த 23ம் தேதியன்று நிலவில் தரையிறங்கியது. இந்த லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், விக்ரம் லேண்டரை, சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளதாக இஸ்ரோ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இந்த நிலையில் இதனை சில நிமிடங்களில் டுவிட்டர் பக்கத்தில் இருந்து இஸ்ரோ, நீக்கி உள்ளது. இருப்பினும் இஸ்ரோவின் இந்த பதிவு டுவிட்டர் பயனாளர்களால் ஸ்கிரீன் ஷாட் எடுக்கபட்டு வைரலாகி வருகிறது.