தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் ஷவர்மா(shawarma) அடுப்பிலிருந்த சிக்கனை தெரு நாய் ஒன்று கடித்துச் சாப்பிடும் வீடியோ தற்பொழுது சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்தின் பெயரில் நான்கு கிளைகள் செயல்பட்டு வருகிறது.
இதில்ஜார்ஜ் ரோட்டிலுள்ள அமைக்கப்பட்டுள்ள கிளையில் ஷவர்மா(shawarma) தயார் செய்வதற்காக சிக்கனை வேகவைத்திருக்கின்றனர் இந்த நிலையில், அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று ஆசையாக சிக்கனைக் கடித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறது.
மேலும் அங்கிருந்த சிக்கனை சாப்பிட்டதோடு மட்டும் அல்லாமல் சமையல் பாத்திரங்களையும் நக்கி உண்ணும் வீடியோ வெளியாகி வைரலானது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் உணவுப் பாதுகாப்புத்துறையின் புகார் எண்ணுக்கு தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் தகவலை அறிந்து வந்த உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பனின் ஆய்வு மேற்கொண்டார்.அந்த உணவகத்தை ஆய்வுசெய்ததில், 7 கிலோ பழைய சிக்கன் உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப் பொருள்கள் 15 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும், சமுத்ரா ஃபேமிலி ரெஸ்டாரன்ட் உணவகத்திலிருந்த பொது சுகாதார குறைபாட்டிற்காகவும், கால்நடைகள் அணுகும் வகையில் சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருள்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாலும், உரிம நிபந்தனைகளை மீறியிருந்ததாலும், அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யபட்டு உள்ளது.