driver suffered heart attack : ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் திடீரென ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்து விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏறையூர் பாளையம் பகுதிக்கு, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 45 பேர் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்துள்ளனர். இதில் 34 பேர் பெண் சுற்றுலாப் பயணிகள்.
இவர்கள் நேற்று (24.05.24) வெள்ளிக்கிழமை இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்னர் ஸ்ரீரங்கம் செல்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனர் போம்ஸ்வரராவ்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் அந்த இடத்தில் இருந்த பெயர் பலகை கம்பத்தில் பேருந்து வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனர் போம்ஸ்வரராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக இந்த விபத்து குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்த எலவனாசூர் கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டு அவர்களை பாதுகாப்பாக ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்துச் செல்ல மாற்று பேருந்து ஆந்திராவில் இருந்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்,
பேருந்து வரும் வரை தனியார் மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு காத்திருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வந்த பேருந்தில் ஓட்டுனருக்கு நெஞ்சு வலி (driver suffered heart attack) ஏற்பட்டு விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.