இத்தாலியின் மிலன் நகரில் உள்ள புகழ்பெற்ற பசுமை கட்டிடங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த இரும்பு கயிற்றின் மேல் நடந்து லோரேனி என்ற 48 வயது நபர் புதிய சாதனை படைத்துள்ளார்.
மிலன் நகரில் உள்ள வெர்டிகேல் என்ற பசுமை கட்டிடத்திற்கும், மிலன் நகரின் மிக உயரமான கட்டிடம் என்று அழைக்கப்படும் யூனி கிரெடிட் என்கிற அடுக்குமாடி கட்டிடத்திற்கும் இடையே பலமான இரும்பு கம்பிகள். இணைக்கப்பட்டிருந்தன.
தரையில் இருந்து 450 அடி உயரத்திலும் சுமார் 650 அடி நீளத்திலும் அந்த இரும்பு கம்பிகள் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்தன.
இரும்பு கம்பி பொருத்தப்பட்டிருந்த கட்டிடங்களில் ஒன்றான வெர்டிகேல் அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 20,000 செடிகளால் சூழப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் ஆகும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தையும், கார்பன் உமிழ்வை தடுக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த கட்டிடங்கள் பசுமை கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவை செங்குத்தான காடுகள் என்று மிலன் நகர வாசிகளால் அழைக்கப்படுகின்றன.
இந்த கட்டிடத்திற்கும் அருகில் இருந்த யூனிட் கிரெடிட் கட்டடத்திற்கும் இடையிலான தூரத்தை லாவகமாக அந்தரத்தில் கம்பியில் நடந்தபடி ஆண்ட்ரியா லோரேனி கடந்தார்.
இது மிலன் நகரில் மிக உயரமான கட்டிடத்தின் மேல் கம்பி மேல் நடந்த சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும், பருவநிலை மாற்ற பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.