போக்குவரத்து அமைச்சரிடம், அரசு பஸ் டிரைவர் கோரிக்கை வைத்த நிலையில், அவர் தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது அரசு பேருந்து டிரைவர் ஒருவர், மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக பணி மாறுதல் கோரி 6 மாத குழந்தையுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த நிலையில், டிரைவரின் விருப்பப்படி அவரது சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அரசு பேருந்து டிரைவர் கண்ணன் கூறுகையில்,
எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில், என் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார்.
தற்போது, என் இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய், தந்தையர் தான் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், என் பெற்றோர்களுக்கு வயது காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. என் குழந்தைகளையும் சொந்த ஊரில் இருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது.
இப்படியான சூழலின் காரணமாக எனக்கு என் சொந்த ஊரான தேனிக்கு பணி மாறுதல் வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இதற்கு முன் இதுகுறித்து பலமுறை பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அதனால், கடைசியாக அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்துள்ளேன். எனக்கு இது தவிர வேறு வழி தெரியவில்லை. எனது பிரச்சனை குறித்து பேசி தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியது ஆறுதல் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.