குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் நகரைச் சேர்ந்தவர் தம்புசாமி மகன் அறிவழகன்(62). அறிவழகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவர் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்துள்ளார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெயினா பீவி (45) என்பவரை அறிவழகன் இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணியாற்றிய இவர் கடந்த ஒரு ஆண்டாக ஊரிலேயே தங்கியுள்ளார்.
இத்தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. இவருக்கும் இவரது காதல் மனைவியான ஜெயினா பீவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த அறிவழகனின் உறவினர்கள் ஜெரினா பீவி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியதையும், அறிவழகன் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் பெரம்பூர் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று ஜெயினா பீவியை மீட்டு சிகிச்சைக்காக உறவினர்கள் உதவியுடன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.
இறந்த அறிவழகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராற்றினால் ஆத்திரமடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதில் ஜெரினா பீவி படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியுள்ளார்.
அதனைக் கண்டு மனம் உடைந்த அறிவழகன், ஜெயினாபீவியின் கண்ணின் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.