தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், மீனவர்கள் கைது விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்..
“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் ஒருபுறமும் அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் மறுபுறமும் தொடர் தாக்குதல் நடத்தி படகுகளையும் உடமைகளையும் பறிமுதல் செய்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மீனவர்கள் கைது விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாத வண்ணம் நிரந்தர முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.