மேல்படிப்பு படிப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து அமெரிக்கா சென்ற இளம்பெண், தெருவில் பிச்சை எடுக்கும் சூழலில், மத்திய மந்திரியிடம் அவரது தாயார் உதவி கேட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு தனது முதுநிலை படிப்பிற்காகச் சென்றுள்ளார்.
அதையடுத்து, கடந்த 2 மாதங்களாக சையிடா லுலுவை அவரது தாயார் சையிடா வகாஜ் பாத்திமாவால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அதிக மனக்கவலையில் இருந்த அவருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அதாவது, ஐதராபாத் நகரை சேர்ந்த 2 இளைஞர்கள் சையிடா லுலுவின் தாயார் பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார் என்றும், அவரது உடைமைகளை யாரோ சிலர் திருடி சென்றுவிட்டதால் உணவு வாங்கக் கூட பணம் இன்றி பசியால் வாடி வருகிறார் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவின் சிகாகோ நகர தெருக்களில் மனா அழுத்தத்தால் அவர் சுற்றி திரிகிறார் எனவும் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சையிடா லுலுவின் தாயார் இதுபற்றி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தனது மகளை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றிய தகவலை பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் காலீகுர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.