திமுக விதைத்த விஷவிதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை(annamalai) விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினைகள் காரணமாக, பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது.மாணவர் சின்னதுரை, நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன்.
சிறந்த மாணவராக, வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர், ஜாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, திமுக என்பதை அனைவரும் அறிவர்.
இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுகவின் செயல்பாடுகளின் விளைவுதான், இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.