பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவையும் அடங்கும்.
இந்த கல்லூரிகளில் பி.இ., பி டெக் படிப்புகளில் சேர சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் ஒற்றை சாளர முறையில் இணைய வழி பொது கலந்தாய்வு மூலம் இவை நிரப்பட்டு வருகிறது .
அதன்படி ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்து 98,853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார் .
பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடம், நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம் பிடித்துள்ளார்.
கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர் .