திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பேராசிரியை (professor) ஒருவரின் தலையில், உருட்டு கட்டையால் தாக்கிய மர்ம நபர் அந்த பெண் மயங்கி விழுந்தவுடன் அவரது கால்களை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சாலையோர பூங்கா ஒன்றில், பெண் ஒருவரை மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர், பெண்ணின் பின் தலையில் தாக்கி அவரை தரதரவனை இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை அடுத்து அந்தப் பெண்ணுக்கு என்னவானது என்பது குறித்தும், அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்திய போது அந்த மர்ம நபர் மதுபோதையில் பட்டப்பகலில் இந்த செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி சீதாலட்சுமி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக (professor) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பேராசிரியை சீதாலட்சுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் வழக்கமாக தான் நடைப்பயிற்சி செல்லும் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள வெஸ்லி தனியார் பள்ளி மைதானத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு சென்றதும், தனது செல்போனில் பேசியபடியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அவரை போதை ஆசாமி ஒருவர் தாக்கி மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சீதாலட்சுமி அந்த மர்ப நபரை வரை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போனில் பேசியவாறு தனது நடைப்பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த கொள்ளையன் சீதாலட்சுமியை தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்ததும் அவரது கால்களை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று புதர் மறைவில் போட்டதாகவும், மேலும் அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் நடைபெற்றதால் இதனை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், சாலையின் மறுபுறம் இருந்த துணிக்கடை ஒன்றின் மேல் தளத்தில் இருந்த ஊழியர் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து அந்த இளைஞர் உடனடியாக இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை கேட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீதாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், சீதாலட்சுமி தாக்கி விட்டு தப்பிச்சென்ற போதையாசாமியை அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கைது செய்துள்ளதாகவும் காவல்துறையின் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்த கொள்ளையன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், பணம் கொடுத்து இருந்தால் தான் அங்கிருந்து சென்றிருப்பதாகவும் ஆனால், அந்த பெண் பணம் தராமல் தொடர்ந்து தனது நடை பயிற்சி மேற்கொண்டதால் ஆத்திரம் அடைந்து தான் இவ்வாறு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இந்நிலையில், நடை பயிற்சிக்கு செல்லும் பெண்கள் மக்கள் நடமாட்டம் இருக்கும் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களுக்கு செல்ல வேண்டும் எனவும், தங்களை யாராவது பின் தொடர்வது போன்று தெரிந்தால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.