கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில், கூரை (roof) வீடு தீப்பிடித்து எரிந்ததில், 1½ வயது பெண் குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அடுத்த வண்டிப்பாளையம் அருகே உள்ள முருகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. கருத்து வேறுபாடு காரணமாக இவர் கணவரை விட்டு பிரிந்து தனது தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது 1½ வயது குழந்தை கவிதிவ்யாவை வீட்டில் விட்டுவிட்டு உணவு சமைப்பதற்காக அடுப்பு பற்ற வைத்துவிட்டு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கலைச்செல்வி சென்ற நிலையில், திடீரென வீட்டில் தீப்பிடித்துள்ளது.
இதில், வீட்டிலிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கவிதிவ்யா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த தீ விபத்தில் காயமடைந்த முதியவர் ராஜமாணிக்கம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கூரை (roof) வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், இந்த தீவிபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தீப்பிடித்து எரிந்து 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.