திருவாரூர், குடவாசல் அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கழிவறைக்கு (school toilet) சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர், குடவாசல் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது, கழிவறையில் பதுங்கி இருந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று மாணவியின் காலில் கடித்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செம்மங்குடி என்ற கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில், 16 வயதாகும் வர்ஷினி என்கிற மாணவி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவி வர்ஷினி பள்ளி இடைவேளையின் போது பள்ளி கழிவறைக்கு (school toilet) சென்றுள்ளார். அப்போது, கழிவறையில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக மாணவி வர்ஷினியின் காலில் கடித்துவிட்டது.
இதனை உணர்ந்த பள்ளி மாணவி, அலறியடித்து கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து, உடனடியாக அருகில் இருந்த சக மாணவிகள் இதனை ஆசிரியர்களிடம் சென்று தெரிவித்துள்ளனர்.
பின்னர், மாணவி வர்ஷினியை சக மாணவிகளும், ஆசிரியர்களும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி கழிவறைக்குள் விஷப்பாம்பு மாணவியைக் கடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.