நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புணே செல்லவிருந்த இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அந்த விமானத்தின் விமானி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று கடந்த வியாழக்கிழமை புனே செல்லவிருந்தது. மதியம் 1 மணிக்கு புறப்படவிருந்த இந்த விமானத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானி மனோஜ் சுப்ரமணியம்(40). இயக்கவிருந்தார்.
இந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்பு மதியம் 12.05 மணிக்கு விமான நிலைய நுழைவு வாயில் அருகே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீர் மாரடைப்பு” காரணமாக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சுப்ரமணியத்தின் உடல் கூறாய்வுக்காக நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் நாக்பூர்-புணே விமானம் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த விமான நிறுவன செய்தித் தொடர்பாளர், உயிரிழந்த விமானிக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.