திருச்சி பேருந்து நிலையத்தில் அலங்கோலமாக இருந்த பெண்ணை அடித்த பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர், பெரம்பலூர் கடலூர், ஜெயங்கொண்டம், மற்றும் லால்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் புறப்பட்டு செல்கிறது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிக்கும் குடிமகன் குடித்துவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து இரவு நேரங்களில் அலங்கோலமாக ஆண்களும் சரி சில பெண்களும் படுத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இரவு நேர காவலர்கள் சில நேரம் கண்டிக்கும் பொழுது உடனடியாக சிலர் எழுந்து சென்று விடுவார்கள். ஆனால் நேற்று இரவு அங்கு குடிபோதையில் ஆடைகள் நழுவ அரைகுறையாக படுத்து இருந்த பெண்ணை கண்ட இரவு நேர பெண் காவலர் தனலட்சுமி தனது லத்தியால் எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்.
ஆனால், போதையில் இருந்த பெண்மணியோ அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்தார் இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர் சரமாரியாக லத்தியால் அடிக்கவே அங்கிருந்து அந்த பெண் எழுந்து புறப்பட்டார்.
இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சற்று முகம் சுளிக்கவே வைத்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, இதனை கண்ட திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா பெண் காவலர் தனலட்சுமியை உடனடியாக திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்களிடமும் இதுபோல் குடிபோதையில் உள்ளவர்களிடமும் உரிய முறையில் எடுத்துச் சொல்லி அவர்களை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.