நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் இரண்டு மணி நேரமாக வானிலேயே வட்டமடித்து கொண்டிருந்த நிலையில், பயணிகளும், பொதுமக்களும் பீதி அடைந்தனர். ஆனால் நல்ல வேளையாக எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் தரையிறங்கியது. இதுகுறித்த விரிவான தகவலை பார்க்கலாம்.
திருச்சியில் இருந்து நேற்று இரவு சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
சுமார் 5.40 மணிக்கு விமானம் ஓடு தளத்திலிருந்து வானில் பறந்து சென்றது. அப்போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் விமானத்தில் எரி பொருள் தீர்ந்த பிறகு தரை இயக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்துகொண்டிருந்தது.
விமானம் தரையிறங்கும் போது பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன.
விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு அச்சம், பதட்டம் காரணமாக உடல் நலக்குறைவு ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்தது.
குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் வழி திறக்கப்பட்டு, அந்த வழியாக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டது.
குறிப்பாக திருச்சி விமான நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனையும், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளும் தயாராக இருக்குமாறும், அவசர மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் உள்ளிட்டவற்றையும் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்தனர்.
இதனிடையே விமானத்தில் பயணம் செய்த பயணிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சத்தில் உறைந்து போயிருந்த நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் எனவும் விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கையளித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள், அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். தொடர்ந்து பிபி சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு வேண்டிய உரிய சிகிச்சை அளிக்கபட்டது. சுமார் 4 மணி நேரம் திக் திக் என பயணிகளும் பொதுமக்களும், அதிகாரிகளும் உயிரை கையில் பிடித்து கொண்டிருந்த நிலையில், எந்த வித சேதமும் இன்றி விமானம் தரையிறங்கியபோது அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஓடுபாதை இருந்திருந்தால், அதிக எரிபொருள் சுமையுடன் விமானம் முன்னதாகவே தரையிறங்கியிருக்கும், விமான எரிபொருள் குறையும் வரை பல மணிநேரம் வட்டமடித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்று சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
மேலும் திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை நீட்டிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உடனே திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதனிடையே 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக விமானத்தை தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.