ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்
அகில உலகங்களையும் காத்து இரட்சித்து, நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்து கொண்டிருக்கும் அன்னை பராசக்தியைத் துதித்துப் போற்றும் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான இன்று,
மயிலாடுதுறை ஆதீன மடத்தில் ஸ்ரீ அபயம்பாள் சமேத ஸ்ரீ தர்மபுரீஸ்வர்ர் கோயிலில் அமைந்துள்ள, ஸ்ரீமகாலெட்சுமி துர்க்காதேவி சந்நதியில் நடைபெறும் ஸ்ரீ துர்கா பூஜைக்கு ஐ தமிழ் நேயர்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
நவராத்திரி என்பது பெண்சக்தியை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக, மும்மூர்த்திகளின் சக்திகளை பெற்றுக் கொண்ட மூன்று தேவியர்களும், ஒன்பது நாட்களில், ஒன்பது வடிவங்களாக உருவெடுத்து, மகிஷாசுரன் என்ற அசுரனை வீழ்த்தியதை நினைவுகூறும் விழா.
இதையும் படிங்க : தருமபுரம் ஆதீன மடத்தில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் வழிபாடு !
எந்த அளவிற்கு பெண்கள் மென்மையான குண நலன்கள் கொண்டிருக்கிறார்களோ, அதைப்போலவே, நிறைந்த மதி நுட்பமும், கூர்மையான திட்டமிடும் திறனும் கொண்டு, ‘எப்படி அசுரனை வதம் செய்து, அவன் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றினார்கள்’ என்பதை உணர்த்தும் நாளாகவே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு சங்குநாதம் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, தருமை குருமகாசந்நிதானம்,
ஞானபுரீஸ்வரர் கோயிலை வலம் வந்து வணங்கி, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ துர்காம்பிகை முன்பு, நின்றபடி ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது வேதியர்கள் துர்க்காஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற ஸ்லோகங்களை ஓதினார்கள்.
தேவி பாராயணத்துடன் நவசக்தி அர்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ தருமை சந்நிதானம் திருக்கரங்களால் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன்பின் யானை,பசு,கன்று, ஆடு,குதிரை,ஒட்டகம் ஆகியவற்றை வழிபட்டு, பிரசாதங்கள் வழங்கினார்கள்.
பிரண தார்த்திகரன் சிவாச்சாரியார் இத்தலத்தில் அம்பாள் எழுந்தருளிய வரலாறை சொல்லக் கேட்போம்
“1953 ஆம் ஆண்டு தருமி ஆதீன 25-வது குரு மகாசந்நிதானம் திருக்கயிலாய யாத்திரை சென்றபோது, திடீரென மலைப்பாறைகள் சரிந்து, பாதைகள் அடைபட்டன.வழிதெரியாமல் மலைக்காட்டில் தவித்த சந்நிதானம், “அம்மா.. நீதான் நான் கயிலாயம் செல்ல வழிகாட்ட வேண்டும்” என்று காளியிடம் வேண்டிக்கொண்டார்கள். அதன்பின் ஆச்சரியம்… சந்நிதானம் பூக்களை போட போட ..புதிய பாதை உருவாகி, அதன் வழியே கயிலாயம் சென்று ஈசனை தரிசித்து திரும்பினார்கள். வரும்வழியில் ஆபத்தில் வழிகாட்டி அருளிய கல்கத்தா காளியம்மனை நன்றியோடு தரிசித்தார்கள். அப்போது அங்கிருந்த இச்சிலையில் தோன்றிய அம்பாள் ” நான் உக்கிரமாக இருக்கிறேன்.
என்னை சாந்தப்படுத்தி ,உன் பக்கத்தில் வைத்து வழிபடு .என்னை தரிசிப்போர் அனைவருக்கும் வேண்டியவை யாவும் அருள்வேன் ” என்று கூறியிருக்கிறாள்.அவள் உத்தரவுபடி அங்கிருந்து இந்த அம்பாள் சிலையை கொண்டு வந்து, இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். கிழக்கு திசை நோக்கி, பதினெட்டு திருக்கரங்களுடன் சாந்த சொரூபியாய் காட்சி தருகின்ற இந்த ஸ்ரீ மகாலட்சுமி துர்காதேவி போல், இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்பாளை வழிபட எண்ணிய காரியங்கள் யாவும் சித்தியாகும். அம்பாள் எதிரில் உள்ள தியான மண்டபத்தைச்சுற்றி அம்பாளின் பதிமூன்று அவதாரங்களும் உள்ளனர். இதன் நடுவில் அமர்ந்து யார் தியானம் செய்தாலும், அவர்கள் எதை வேண்டினாலும், அவர்களது நியாயமான குறைகளை, இந்த அம்பாள் உடனே தீர்த்து வைப்பாள்” என்றார்.
” அசுரர்களால் விளைந்த இடையூறுகள் அனைத்தும் நீக்கிய, மாபெரும் சக்தியான வராகி அம்மனை, நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று உளமாற நினைத்து வழிபட்டால்,சகலவிதமான நோய்களும் நீங்கும்.. உடல்நலம் பெருகும்” என்கிறது தேவி மகாமத்யம்.
மீண்டும் இதே தலத்தில் நவராத்திரி நான்காம் நாளில் உங்களை சந்திக்கும்வரை, உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !