இராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் (Thiruma criticise) அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள்.
பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள்.1949 இலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இசுலாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் விளைச்சலாக- வெற்றி விழாவாக சனவரி 22 இல் அயோத்தியில் இராமர் விழா அரங்கேறுகிறது.
‘இராமர் பிறந்த இடம் இதுதான்’ என்று நானூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாபர் மசூதி 1992 இல் அடியோடு பெயர்த்துத் தகர்க்கப்பட்டது.
இசுலாமிய இந்தியர்கள் சிந்திய செங்குருதியில் மத அடிப்படையிலான ஆதிக்கப் பெரும்பான்மைவாதம் நிலைநாட்டப்பட்டது.
‘இராமருக்கே வெற்றி’ என்னும் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தையே ஆயுதமாக உயர்த்திப்பிடித்து இன்று அங்கே இராமர் திருக்கோவில் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள், தனது கைகளால் தொட்டு பால இராமரின் கற்சிலைக்கு உயிரூட்டப் போகிறார்.
பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.
பிரதமர் மோடி அவர்கள் இதற்காக பதினொரு நாட்களுக்கு விரதமிருந்து வருகிறார். தென்னிந்திய மாநிலங்களில் கோவில் கோவிலாகச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவருகிறார்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டு நாள்களாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திருவரங்கம், இராமேசுவரம், தனுஷ்கோடி கோவில்களுக்குச் சென்று இராமரை வழிபட்டு வருகிறார்.
உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் சனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை. எல்லாம் இராமர்மயமாகி வருகிறது. ஆனால், அடிப்படையில் எல்லாம் தேர்தல்மயமாகி வருகிறது என்பது தான் உண்மை!
அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.
இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா!
அப்பாவி ஏழை எளிய உழைக்கும் இந்து மக்களை ஏய்க்கும் அப்பட்டமான ‘இந்து விரோத’ ஆட்சியே மோடி ஆட்சி என்பதை இன்று யாவரும் உணரத் தொடங்கியுள்ளனர்.
இராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.
Also Read : https://itamiltv.com/bilkis-bano-case-convicts-who-went-to-jail/
(Thiruma criticise) சங்- பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.