EVKS Elangovan : ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற முறை வந்தால், திருமாவளவன் கூட பிரதமராகலாம் என ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில்,
“மக்கள் 48 மணி நேரம் அமைதியாக இருந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால், பிரதமர் மோடி, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருகிறார்.
அதனை அனைத்து தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது என்ன நியாயம்? என்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது.
மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, தேர்தல் ஆணையத்தில் தவறு செய்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
பிரதமர் மோடி ஏன் இப்படி தியானம் செய்கிறார்? என்று எனக்குப் புரியவில்லை. இப்படி தியானம் செய்வதால் என்ன கிடைக்கப்போகிறது என்றும் விளங்கவில்லை.
பொதுவாக இதுபோன்று தியானம், யாகம் செய்பவர்கள் எதை எதிர்பார்த்து செய்கிறார்களோ அது நடப்பதில்லை. பிரதமர் மோடி மீதுள்ள அன்பினால் சொல்கிறேன். தியானத்தை கைவிடுங்கள். கடைசியில் முடிவு வேறு மாதிரி வந்துவிடும்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இண்டியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்து, ஸ்டாலினும், ராகுலும் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் பிரதமராக வர வாய்ப்புள்ளது.
திருமாவளவன் ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற யோசனையை சொல்லியிருக்கிறார். அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானால், அவரும் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது.
5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர் என வந்தால் என்ன நஷ்டம்? அதிகாரிகள் மாற்றப்படுவதில்லையா 10 ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்தும் பயனில்லை.
ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். திமுகவும் அதையே விரும்புகிறது.
பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும்போது தான் விடிவு காலம் வரும்” எனக் கூறியுள்ளார் EVKS Elangovan.