திருமாவளவன் எனது ஆசான் கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் பயணிப்பேன் என விடுதலை கட்சியில் இருந்து விலகி உள்ள ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி தலைமையால் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா கூறியதாவது :
திருமாவளவனிடம் இருந்து கள அரசியல் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் எப்போதுமே எனக்கு ஆசான். கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் தொடர்ந்து பயணிப்பேன்.
சாம்ஸ்சங் தொழிலாளர்களுக்காக போராடினால் உங்களை நக்ஸ்லைட்ஸ் என்று சொல்வார்கள், மழை வெள்ளத்தில் மக்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்று சொன்னால் சங்கி என்று சொல்வார்கள்.
பிரச்சார களத்தில் இருந்து ஒரு முழு நேர அரசியவாதியாக வரும் போது என் மீது ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு கண்டிப்பாக என்னுடைய பயணத்தில் தான் பதிலளிப்பேன்.
பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் பல சந்தேகங்கள் எழுப்பிய போது, அவர்களுடைய வாழ்க்கை பயணத்தில் அதற்கான பதிலை அளித்தார்கள் என தெரிவித்துள்ளார்.