மகாராஷ்டிராவில் வீட்டின் வெளியில் மூன்று குழந்தைகள் (children) விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மாயமான குழந்தைகள் 10 நாட்களுக்குப் பிறகு கார் ஒன்றில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகே உள்ள பரூக் நகர் என்ற பகுதியில் மூன்று குழந்தைகள் (children) கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2:30 மணி அளவில் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் மூன்று பேரும் மாலை 7 மணி ஆகியும் வீட்டிற்கு திரும்பாத நிலையில், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும், குழந்தைகளை யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் எனவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை எடுத்து சோதனை மேற்கொண்டனர்.
இரவு முதல் மறுநாள் பகல் வரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் விவரம் ஏதும் கிடைக்காத நிலையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நேற்று மாலை 7 மணி அளவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த வீட்டிற்கு பத்து மீட்டர் தொலைவில் எஸ்யூவி கார் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காரின் கதவை உடைத்து பார்த்ததில் தொலைந்து போன மூன்று குழந்தைகளும் சடலமாக கிடந்தனர்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மெக்கானிக் ஷெட் ஒன்று அங்கு இருந்ததால் பழுது பார்ப்பதற்காக அந்த கார் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் நிற்பதாக தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தைகள் விளையாடுவதற்காக அந்த காரில் ஏறி இருந்திருப்பார்கள் எனவும், அப்போது கார் தாழிட்டு வெளியே வர முடியாமல் மூச்சடைத்து குழந்தைகள் உயிரிழந்திருக்க கூடும் எனவும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
ஆனாலும், குழந்தைகளின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு தான் மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் எனவும், காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குழந்தைகளின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.