பிரசவ வலியால் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணை அரசு மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமல் அலைக்கழித்ததால் கர்பிணி பெண் வலிதாங்க முடியாமல் ஆட்டோவில் ஏறி தனியார் மருத்துவ மனைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததாகவும், அப்பெண் பிரசவ வலியுடன் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உமரிகாட்டைச் சேர்ந்த துர்கா என்ற கர்ப்பிணி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்து வருமாறு மருத்துவர்கள் கூறியதால் பிரசவ வலியுடன் சென்று ஸ்கேன் எடுத்து வந்த துர்காவிடம், அங்கிருந்த மருத்துவர் ஒருவர், ஒரு மணி மணி நேரத்தில் அப்பெண்ணுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிரசவ வார்டிலிருந்து வெளியே வந்த துர்காவுக்கு, அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் உதவிக்கு வராத நிலையில், நீண்ட நேரம் காத்திருந்து ஆட்டோவில் ஏறி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை என அரசு மருத்துவமனைமீது அப்பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண் துர்காவிடம் தூத்துக்குடி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பொன் இசக்கி நேரில் விசாரணை நடத்தினார். அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், துர்காவை மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் இசக்கி, துர்காவைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு அடுத்த மாதம் தான் பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் மருத்துவர்களோ, மருத்துவமனை நிர்வாகமோ தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
நோயாளிகளை தரமாக கையாளும் மருத்துவமனைக்கான மத்திய அரசின் தரச் சான்றிதழ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்ட நிலையில், அங்கு நடைபெற்றுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகளை தரமான முறையில் கையாளும் மத்திய அரசின் தர சான்றிதழ் திருச்செந்தூர் மருத்துவ மனைக்கு கடந்த சில தினங்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில் இது போன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.