திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
‛மெய்யழகன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இயக்குநர் பிரேம் குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். நடிகை ஸ்ரீவித்யா, நடிகர்கள் அரவிந்த் சாமி, ராஜ்கிரண் உள்பட ஏராளமானவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் மனைவி ஜோதிகா தான் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
வரும் 27 ம் தேதி இந்த ‛மெய்யழகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே படத்தின் புரோமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் நடிகர் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மெய்யழகன் திரைப்படம் ஆந்திரா,தெலுங்கானாவிலும் ரிலீசாக உள்ள நிலையில், நேற்று நடிகர் கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
அப்போது திருப்பதி கோவில் லட்டு சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நடிகர் கார்த்தி சிரித்துக்கொண்டே, ‛‛நாம் இப்போது லட்டு பற்றி எதுவும் பேச வேண்டாம். இது சென்சிட்டிவ்வான டாபிக். இதனை பேச விரும்பவில்லை. லட்டு இப்போது வேண்டாம்.” எனக் கூறினார். அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இதுதொடர்பாக ஆந்திர துணை முதல்வராக பொறுப்பு வகித்து வரும் பவன் கல்யாணிடம் விஜயவாடாவில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அவர்,
“திருப்பதி லட்டு பற்றி யாரும் விவாதிக்க விரும்பினால் அதனை திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வரவேற்க வேண்டும். அதனை ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து விஷயங்களிலும் கருத்து சொல்வதை நிறுத்த வேண்டும். இதற்கு கூட பதில் சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லையா?” என்று கூறி நடிகர் கார்த்தியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், “டியர் பவன் கல்யாண், உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எதிர்பாராத வகையில் நடந்த தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தன் என்ற முறையில் எப்போதும் நான் நம் மரபுகளை மதித்து நடக்கிறேன்” என கூறியுள்ளார்.