திருப்பூரில் தனியார் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திருப்பூர் மாநகர் வீரபாண்டி பகுதியில் தனலெட்சுமி என்பவருக்கு சொந்தான சாயப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால், சாயப்பட்டறையின் பின்புறமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இதில், ராமகிருஷணன், வடிவேல், நாகராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்துக்குள் தொழிலாளி வடிவேலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவர் சத்தம் போடவே சாயப்பட்டறை ஆலை மேலாளர் தினேஷ் மற்றும் ஊழியர்கள் தொட்டிக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு வடிவேலு மற்றும் மேலாளர் தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
தொழிலாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .