கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதி தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது. இதன்படி, சமுதாய, அரசு மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதித்த தடை நீக்கம், திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை அனுமதிக்கலாம், உள்ளிட்டவற்றை தவிர்த்து இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
மேலும் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இந்த கட்டுப்பாடு தளர்வுகள் இம்மாதம் இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா அத்திகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் நான்காவது அலை பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.