சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்று மாபெரும் சாதனை புரிந்துள்ளார் .
இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறைகள் பல துறைகளில் தங்களது கால்தடத்தை அழுத்தமாக பதித்து வரும் நிலையில் விளையாட்டு துறையிலும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் . அதிலும் குறிப்பாக தற்போது தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பல பதக்கங்களை வென்று பல சாதனைகளை படைத்து வருகின்றனர் .
அந்த வகையில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் வுசியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடந்த பெண்களுக்கான சாப்ரே பிரிவின் அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி, கஜகஸ்தான் நாட்டின் ஜாய்னாப் டேய்பெககோவாவை எதிர்கொண்டார் .
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 14-15 என்ற புள்ளி கணக்கில் ஜாய்னாப்பிடம் போராடி வீழ்ந்தார். இருப்பினும் அரைஇறுதி வரை சென்றதால் புள்ளிகளின் அடிப்படியில் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது .
இந்த வெற்றியின் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் 29 வயதான பவானி தேவி .
தாய் நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்து புதிய சரித்திரம் படைத்துள்ள பவானி தேவிக்கு, இந்திய வாள்வீச்சு சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா உள்பட பலரும் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்