கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை (tomato price) ரூ.50-ஆக குறைந்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை (tomato price) திடீரென உயர்ந்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது.
அதன்படி, தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இந்நிலையில், இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை விலை சற்று குறைந்து ரூ.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது அன்று தெரிவித்துள்ளனர்.
இதனால், தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை விற்பனை நிலையங்களில், தக்காளி விலை குறைந்து கிலோவுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் வந்து கொண்டிருந்த தக்காளி, இன்று 700 டன்னாக வந்துள்ளது. மேலும், இனி வரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் எனவும், இதனால் தக்காளி விலை இன்னும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.