தெலுங்கானாவில், தனது கற்பை நிரூபிக்க பஞ்சாயத்தார் சொன்னபடி சூடான கம்பியை வெறும் கைகளால் எடுத்து ஒருவர் அக்னி பரீச்சை (Agni Pareecha) செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில், பஞ்சருபள்ளி கிராமத்தில் வசிக்கும் ஒரு நபர், தனது தம்பிக்கும், மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, தனது தம்பிக்கு அக்னி பரீட்சை வைத்த நிலையில், தனது மூத்த சகோதரரின் மனைவியுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க அக்னி பரீட்சை செய்துள்ளார் அந்த நபர்.
இதற்காக, பஞ்சாயத்தார் அக்னி பரீட்சைக்காக தீமூட்டி அதில் பெரிய இரும்புக் கம்பி ஒன்றை போட்டு வைத்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர், நெருப்பில் கிடக்கும் அந்த சூடான கம்பியை வெறும் கைகளால் எடுத்து அகற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
மேலும், அவர் செய்யும் இந்த அக்னி பரீட்சைக்குப் (Agni Pareecha) பிறகு அவரது கையில் தீக்காயம் ஏற்படாவிட்டால் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்றும், ஒருவேளை தீக்காயம் ஏற்பட்டால் அவர் குற்றவாளி என்பது நிரூபணமாகி விடும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.
இதனையடுத்து, அந்த நபரும் இந்த அக்னி பரீட்சைக்கு ஒப்புக்கொண்டு பஞ்சாயத்தார் சொன்னபடி பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியை வெற்றுக் கைகளால் நெருப்பில் இருந்து எடுத்து வீசி அக்னி பரீச்சையை செய்துவிட்டார். அவரது கைகளிலும் எந்த தீக்காயமும் ஏற்படவில்லை.
இருந்தாலும், அவரது அண்ணனும், பஞ்சாயத்தாரும் அவரை தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதனால், அந்த நபரின் மனைவி காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், பஞ்சாயத்துத் தலைவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.11 லட்சம் தொகையை பறித்துக்கொண்டு, அக்னி பரீட்சை நடத்த ஏற்பாடு செய்தனர் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.