வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது.
மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மாநாட்டு திடலில் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
த.வெ.க மாநாட்டிற்க்காக தமிழகம் முழுவதிலும் இருந்து விஜய் கட்சி தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி புறப்படுவதற்கு தயாராகி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கு தனித்தனி குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்குள் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மயிலாடுதுறை – ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயங்கள்!
மாநாட்டிற்கு வருகிற அனைவரும் விஜய் படம் இருக்கும் டி-ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களும் சீருடையில் வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாநாடு சரியாக 4 மணிக்கு தொடங்கும் போது விஜய் சிறப்புரை ஆற்றுவார் என்றும், தொடர்ந்து இரவு 8 மணியளவில் அவர் தனது பேச்சை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 9 மணி அல்லது 9.30 மணி அளவில் மாநாடு நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக-வின் முதல் மாநாட்டில் 100 அடிக்கு வைக்கப்படும் கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார்.
அந்த கொடி கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படக் கூடாது என்று மாநாட்டு திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்பவருடன் தவெக சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.