பிலிப்பைன்ஸ் நாட்டில் கோரத்தாண்டவம் ஆடிய புயல் காரணமாக இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து 2 நாட்களாக வீசிய, ராய் என அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த புயல் அந்நாட்டையே புரட்டிப்போட்டுள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 270 கிமீ வேகத்தில் சுழன்று அடித்த சூறாவளியால் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்கள் உருகுலைந்தன.
தொடர்ந்து 2 நாட்களாக வீசிய இந்த புயல் காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, போஸ்ட் கம்பங்கள், மீன்பிடி படகுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், வாகனங்கள், ஏராளாமான கால்நடைகளும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதோடு விளைநிலங்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

3வது நாளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு தகவல் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்ககுள்ளாகினர்.
இந்தநிலையில் புயல் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ள இடங்களில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரத்தாண்டவம் ஆடிய இந்த புயலால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதகவும் 375 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதகவும் கூறப்படுகிறது.
புயல் தாக்கி 3 நாட்கள் ஆகியும் இழப்புக்கள் எவ்வளவு என்பதை கணக்கிட முடியாத அளவிற்கு, சூழல் மிகவும் கடினமாக இருப்பதாக கூறிய அந்நாட்டு காவல்துறை, நூற்றுக் கணக்கானோரை காணவில்லை என்றும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.