சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பிய அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-அமைச்சராக பதவியேற்றார். சட்டசபையிலும் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
முன்னதாக உத்தவ் தாக்கரேயை எளிதில் அணுக முடியவில்லை என ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்தநிலையில் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
தாதர் சேனா பவனில் உத்தவ் தாக்கரே தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
“இது சிவசேனாவை அழிக்க பா.ஜனதா போட்ட சதி. தைரியம் இருந்தால் இடைத்தேர்தலை நடத்துங்கள் என அவர்களுக்கு சவால் விடுகிறேன். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதை விடுத்து, நாம் மக்கள் மன்றத்தை சந்திக்கலாம்.
ஒருவேளை நாங்கள் தவறு செய்து இருந்தால் மாநில மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். நீங்கள் தவறு செய்து இருந்தால் உங்களை (பா.ஜனதா, ஷிண்டே அணி) வீட்டுக்கு அனுப்புவார்கள். சட்டசபையை இதுபோல நடத்துவது அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல். நான் போராட உள்ளேன். போராட்டத்திற்கு தயாராக உள்ளவர்கள் என்னுடன் இருக்கலாம்” என அவர் பேசினார்.