உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு வழங்க இருந்த பரிசுத் தொகை 1லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்ற நிலையில் அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்பி கலாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி வந்தனர்.
அப்போது நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக சேப்பாக்கம் தொகுதி வட்டசெயலாளரான வெங்கடேசன் 1 லட்சம் ரூபாயை பாக்கெட்டில் வைத்திருந்தார். கூட்ட நெரிசலில் திடீரென பாக்கெட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெங்கடேசன் அருகிலேயே நீண்ட நேரமாக நின்று நோட்டமிட்டு, உதயநிதி ஸ்டாலின் புறப்படும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த 1 லட்ச ரூபாயை பறித்து செல்வது போன்று காட்சியில் பதிவாகி உள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.