பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ பிடித்தாதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சமீப நாட்களாக பயணிகள் ரயில், சரக்கு ரயில் என தீப்பிடித்து எரியும் சம்பவங்களும், தடம் புரளும் சம்பவங்களும் பயணிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
குறிப்பாக ஒடிசாவில் கடந்த ஜூன் 2ஆம் தேதி கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசமான ரயில் விபத்தில் சுமார் 293 பேர் உயிரிழந்த நிலையில், 1000 மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ பிடித்தாதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்யான் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.45 மணிக்கு கர்நாடக மாநிலம்
பெங்களூர் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. ரயிலில் இருந்து பயணிகள் இறங்கிச் சென்ற நிலையில், அந்த ரயிலில் காலை 7.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிகளவில் புகை வரத் தொடங்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் மெஜஸ்டிக் அருகே உள்ள சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம் பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்தை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.