திருமால், தனது பக்தன் பிரகலாதனை காப்பதற்காக, சிம்ம முகத்துடன், மனித உடலுடன் நரசிம்ம பெருமாளாக அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். எனவே திருமால், நரசிம்மபெருமாளாக எழுந்தருளி, அருள்பாலிக்கும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவனாகக் கருதப்படுகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித்தனியாக நரசிம்மபெருமாள் ஆலயங்கள் அமைந்திருக்கும்.
ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் ,சீர்காழி அருகே மங்கைமடத்தைச் சுற்றி ,ஐந்து கிலோ மீட்டர் தலைவர்கள், ஐந்து நரசிம்மபெருமாள் திருத்தலங்கள் அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகும். இவை
‘பஞ்ச நரசிம்ம பெருமாள் ஷேத்திரங்கள் ‘ என்றழைக்கப்படுகின்றன.
இந்த ஐந்து தலங்களையும் ஒரு சேரத் தரிசிப்பதால், ‘வாழ்விற்கு வேண்டிய அனைத்து வளங்களையும் அடையலாம்’ என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இனி பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசிக்கலாம். வாருங்கள்….நேயர்களே..,
முதல் தலமான திருக்குறையலூர் உக்கிரநரசிம்ம பெருமாள் ஆலயத்திற்குச் செல்வோம்.
“குறை இல்லாத வாழ்வு தரும் இந்த திருக்குறையலூரில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.
அவர் பூஜைசெய்து வழிபட்ட உக்கிரநரசிம்ம பெருமாள் இவர். இப்பெருமாளை வழிபட எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும். திருமங்கையாழ்வாருக்கு மன்னனாகப் பதவி கொடுத்தவர்.எனவே இத்தலத்தில் வந்து உக்கிரநரசிம்மரை மனமுருகி வேண்டுவோர்க்கு, அரசுப் பதவிகள், அரசியலில் பதவிகள் என பதவி தரும் பெருமாளாகவே அருள்பாலிக்கிறார் ” என்கிறார் பார்த்தசாரத்தை பட்டாச்சாரியார்
இரண்டாவது தலமான மங்கைமடம் வீரநரசிம்ம பெருமாளை தரிசிப்போம்.
” திருமங்கைமன்னன் குமுதவல்லியை மணம் புரிய பேரருள் பெற்றதும், திருமங்கையாழ்வாராக போற்றப்பெற்றதும் இத்தலத்தில்தான்.துளசி மாலைசாற்றி, நெய்தீபமேற்றி,தயிர்சாதம் நிவேத்தியம் செய்து வீரநரசிம்மரை வழிபட்டால் ,வாழ்வில் அனைத்திலும் வெற்றிதான்” என்கிறார் பாலாஜி பட்டாச்சாரியார்.
திருநகரியில் உள்ள யோகநரசிம்மர், ஹிரண்யநரசிம்மர் வீற்றுள்ள கல்யாண ரங்கநாதர் ஆலயத்திற்குச் செல்வோம்
இத்தலத்தின் மூலவராக ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் பெருமாள் சேவிக்கிறார்.
விமானத்தில் வடக்கு நோக்கி ஹிரண்ய நரசிம்மரும் , பிரகாரத்தின் பின்புறம் யோகநரசிம்மர் பெருமாளும் அருள்பாலிக்கின்றனர்.
தாமரை மலருக்குள் ஒளிந்திருந்த திருமகளை பெருமாள் தேடி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்.
திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் பெருமாள் அருள்பாலிப்பதால், இந்த இரண்டு தலங்களையும் சேர்த்து இரட்டைத்தலங்கள் (திருவாலி – திருநகரி) என்றழைக்கப்படுகின்றன.
ஒரு சமயம் சீர்காழியில் திருஞானசம்பந்தரை, திருமங்கையாழ்வார் சந்தித்தபோது, நாலுகவி குறித்து வினவிய சம்பந்தர், ஆழ்வாரின் திறமையைக் கண்டு வியந்து ,வேல் ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்தார்.
இத்தலத்தில் தனிச்சந்நிதியில் வேலுடன் திருமங்கையாழ்வார் அருள்பாலிக்கிறார், இவருக்கு எதிரே ஒரு கொடிமரம் உள்ளது.
பெருமாளுக்கும் எதிரே ஒரு கொடிமரம் உள்ளதால், இத்தலத்தில் மட்டும் இரண்டு கொடி மரங்கள் உள்ளன.
ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண கோலத்தில் அமர்ந்த நிலையில், திருமங்கையாழ்வாருக்கு காட்சி கொடுத்த தலம் இது. மற்ற நான்கு தலங்களிலும் திருமங்கையாழ்வார் பூஜைகள் செய்திருக்கிறார். ஆனால் இத்தலத்தில் மட்டும்தான் பூஜைகள் செய்ததோடு,
மங்களாசாசனம் செய்திருக்கிறார். திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் ரங்கநாதருக்கு மாலை சாகூறி,ஒரு பிடி சக்கரைசாதம் நிவேத்தியம் செய்து வழிபட்டால் 48 நாட்களில் திருமணங்கள் நடப்பது உறுதி. அதுபோல் கல்வி, ஞானம்பெற, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து ,19 முறை கோயிலை வலம் வந்து வணங்கப் பெருமாள் அணுக்கிரகம் கிட்டும் ” என்கிறார் பத்மநாதன் பட்டாச்சியார்.
ஐந்தாவது திருவாலியில் அமைந்துள்ள லட்சுமிநரசிம்மபெருமாள் ஆலயத்தைக் காணலாம்.
பெரும்பாலான நரசிம்மர் ஆலயங்களில் பெருமாளின் இடது புறத்தில்தான் லட்சுமி அமர்ந்திருக்கும் தோற்றம் இருக்கும். ஆனால் மிக அரிதாக இந்த தலத்தில் மகாலட்சுமி நரசிம்மரின் வலது தொடையில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
கலியுகத்தில் சேனைத் தலைவரின் மகனாகப் பிறந்த நீலன் என்கிற திருமங்கைமன்னன்
திருவாலியில் வசித்த குமுதவல்லியை மணம் முடிக்க எண்ணியபோது, “ஓராண்டு காலத்துக்கு தினமும் 1,000 வைணவர்களுக்கு அன்னதானம் செய்தால், மணம் புரிந்து கொள்ள சம்மதம்” என்று குமுதவல்லி கூறுகிறார்.
அன்னதானம் செய்து, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும் தீர்ந்தபோது, மேற்கொண்டு அன்னதானம் செய்ய பொருள் வேண்டுமே என்று எண்ணிய திருமங்கைமன்னன். வழிப்பறியில் ஈடுபடலானார்.
அந்த சமயத்தில் திருவாலியில் பெருமாள் லட்சுமியை மணம் முடித்துவிட்டு தேவராஜபுரம் வழியே வரும்போது திருமங்கைமன்னன் வழிமறிக்க, அவருக்கு அஷ்டாட்சர மந்திரத்தை தானே உபதேசம் செய்தார். திருமந்திரத்தை பெருமாள் தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது.
திருமங்கையாழ்வார் இந்த தலத்தில் ஐந்து நரசிம்மர்களை வழிபாடு செய்ததாக சொல்லப்படுவதால்,
இத்தலத்தில் வழிபட்டால் பஞ்ச நரசிம்ம தலங்களையும் வழிபட்டதற்கு சமம் என்கின்றனர்.
குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் இத்தலத்தை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்
“ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தலத்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணத் தலம் என்பதால் திருமணம் ஆகாதவர்கள் வந்து வணங்கினால் உடனே திருமணம் நடக்கும். அதுபோல் வியாபார அபிவிருத்தித் தலம் .புதுசா தொழில் தொடங்குவோர் ஒரு ரூபா இப்பெருமாளுக்கு காணிக்கை வைத்துத் தொடங்கினால், அது ஒரு கோடியாக கிட்டும் என்பது ஐதீகம். இப்படி வேண்டுவோர் பிரார்த்தனைகள் நிறைவேறியதும், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் ” என்கிறார் பத்மநாபன் பட்டாச்சாரியார்.
ஒரே நேரத்தில், பஞ்ச நரசிம்மர் ஆலயங்களை தரிசித்த உங்களுக்குப் பெருமாளின் பரிபூரண ஆசிகள் கிடைக்க வேண்டி, உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !